கொடூர கொலை வழக்குகள்
வைதேகி பாலாஜி
144 பக்கங்கள்
மர.ண தண்டனை என்பது பல நாடுகளில் எப்போதுமே சர்ச்சையை ஏற்படுத்தும் ஒரு விஷயமாகதான் இருக்கிறது. அரசாங்கமாகவே இருந்தாலும் கூட ஒரு உயிரை பறிப்பதற்கான உரிமை யாருக்குமே கிடையாது என்பது பொதுவான கருத்தாக இருந்து வருகிறது. இந்த கருத்துக்கு பல நாடுகள் உட்பட்டுள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என 155க்கும் அதிகமான நாடுகள் தற்சமயம் மர.ண தண்டனையை நீக்கியிருக்கின்றன.
சில நாடுகள் வெளிப்படையாக அமலில் வைத்துள்ளன. ஆனால் சில நாடுகள் அரிதாக மட்டுமே மரண தண்டனையை பயன்படுத்துகின்றன. இந்த குற்றவாளிக்கு அரசாங்கத்தாலேயே மன்னிப்பு வழங்க முடியாது என நினைக்கும் அளவிற்கு கொடூரமான குற்றங்களை செய்த குற்றவாளிகளுக்கு மட்டும் அரிதாக மரண தண்டனை வழங்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் இறுதியாக ஆட்டோசங்கர் எனப்படும் கௌரி சங்கருக்கு 1995 ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதற்கு பிறகு இப்போது வரை அப்படியான தண்டனை யாருக்கும் வழங்கப்படவில்லை. இந்த புத்தகத்தை பொறுத்தவரை இந்தியாவில் கொடூரமான குற்றங்களை செய்து மரண தண்டனை பெற்ற முக்கிய குற்றவாளிகளை பற்றிய தகவல்களை வழங்குகிறது இந்த புத்தகம்.
அந்த வகையில் ஆட்டோ சங்கர், பூலான் தேவி, வீரப்பன், சீமா மற்றும் ரேணுகா வழக்கு, டாக்டர் சோம்நாத் பரிதா, சயனைட் மல்லிகா, அஜ்மல் கசாப், நொய்டா தொடர் படுகொலை ஆகிய வழக்குகளை விவரிக்கிறது இந்த புத்தகம்.
ஒவ்வொருவர் குறித்தும் அதிக விரிவான தகவல்கள் இல்லை என்றாலும் கூட போதுமான அளவிலான தகவல்கள் புத்தகத்தின் வழி கிடைக்கின்றன. நூலின் ஆசிரியரான வைதேகி பாலாஜி வழக்கறிஞர் என்பதால் அதிக விவரங்களை வழங்கியுள்ளார்.
இன்னமும் பாதுகாப்பான சமூகத்தில் வாழ்ந்துக்கொண்டுள்ளோம் என நினைக்கும் ஒவ்வொருவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இதில் சில குற்றங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமான குற்றவாளிகள் சீமா மற்றும் ரேணுகா.
சீமா மற்றும் ரேணுகா இருவருமே சகோதரிகள் இவர்கள் திருடுவதை வேலையாக கொண்டவர்கள். இவர்களுக்கு தலைவர், தொழில் சொல்லி கொடுத்த குரு எல்லாமே அவரது தாயார்தான். இந்த மூவர் கூட்டணி செய்த கொலை குற்றங்கள் கொஞ்சம் பீதியை ஏற்படுத்துபவை.
திருவிழா மாதிரியான அதிக கூட்டம் கூடும் இடங்களில்தான் இவர்கள் கைவரிசையை காட்டுகின்றனர். அப்படி திருடும்போது மாட்டிக்கொண்டால் தப்பிப்பதற்கு இவர்கள் குழந்தைகளை பயன்படுத்துகின்றனர். குழந்தை வைத்திருக்கும் பெண்களை நம் மக்கள் அடிப்பதில்லை. எச்சரித்து அனுப்பி விடுவார்கள்.
இதற்காக இந்த மூவர் கூட்டணி இரண்டு அல்லது அதற்கு குறைவான வயதுடைய குழந்தைகளை கடத்துகின்றனர். அந்த குழந்தைகள் தூக்க முடியாத அளவிற்கு வளர்ந்துவிட்டாலோ அல்லது சொல் பேச்சு கேட்கவில்லை என்றாலோ அவர்களை கொலை செய்து உடல்களை எங்காவது வீசிவிடுவார்கள்.
இப்படி குழந்தைகளை கொலை செய்யும் இந்த குழு அவர்களை கொடூரமாக சுவற்றில் அடித்தோ அல்லது தூக்கில் தொங்கவிட்டோ கொலை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். 1990 முதல் 1996 காலக்கட்டங்களில் மட்டும் இப்படி 13 குழந்தைகளை இவர்கள் கடத்தி கொலை செய்தனர்.
இந்த நிலையில் வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தப்போது இவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அதனை மறுத்து 2014 இல் அப்போதைய குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜியிடம் கருனை மனு அனுப்பினர். ஆனால் அதை நிராகரித்தார் குடியரசு தலைவர்.
இந்த நிலையில் மேல் முறையீடு செய்து மரண தண்டனையை வாழ்நாள் முழுவதும் ஆயுள்தண்டனையாக மாற்றி கொண்டது இந்த கும்பல். மேல் முறையீட்டை தாண்டி பெண்களுக்கு மரண தண்டனை வழங்குவது இந்தியாவுக்கு ஒரு அவப்பெயராக இருக்கும் என்பதும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.
இந்த மாதிரி சமூகம் சமநிலையில் இருப்பதாக நம்பி வாழும் பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் குற்றங்களை செய்த குற்றவாளிகளை இந்த புத்தகம் வரிசைப்படுத்துகிறது. எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என்பதை நாம் அறிந்துக்கொள்ள இந்த மாதிரியான புத்தகங்கள் தேவையாக இருக்கின்றன.
எனவே வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம் கொடூர கொலை வழக்குகள்.

Comments
Post a Comment