குமஸ்தாவின் பெண்
அறிஞர் அண்ணா
ஆண்கள் பெண்ணியம் பேசுறதுங்குறது பூனை எலிக்கு பரிந்து பேசுற மாதிரினு பெரியார் சொன்னதா சொல்லுவாங்க. அவர் சொன்னாரா இல்லையானு தெரியலை. ஆனால் இந்த புத்தகத்தை அண்ணா எழுதியிருந்த விதம் அப்படிதான் இருந்தது. தமிழ் சினிமாவிலும் சரி இலக்கியவாதிகள் இடத்திலும் சரி கற்பு தவறிய பெண்ணின் எண்ட் கார்டு என்பது அழுகாச்சியாகதான் முடிய வேண்டும் என்பது எழுதப்படாத விதி.
ஏற்கனவே செம்மீன் நாவலில் தகழி சிவசங்கரபிள்ளையும் இதே வேலையைதான் பார்த்து வைத்திருப்பார். ஒரு பெண் ஏதோ ஒரு காரணத்துக்காக திருமணத்திற்கு பிறகு உறவு என செல்லும்போது அதிலும் குமஸ்தாவின் மகளிடம் எந்த ஒரு தவறுமே காணப்படவில்லை.
தனது கணவனுக்கு துரோகம் கூட செய்யாத ஒரு கதாபாத்திரம் என்றுதான் கூற வேண்டும். வயதான நபருடன் திருமணம் ஆனாலும் கூட அவர் இறந்த பிறகுதான் அவள் பணக்காரர் ஒருவருடன் உறவில் செல்கிறார். அதுவும் அவருக்கு வைப்பாட்டியாக இருப்பதன் மூலம் குடும்பத்தின் ஏழ்மையை சரி செய்ய முடியும் என்கிற நோக்கத்திற்காகவே செல்கிறாள். பிறகு அந்த பணக்கார வாழ்க்கை அவளுக்கு பிடித்து மோசமானவளாக மாறுகிறாள் குமஸ்தாவின் மகள்.
இந்த இடத்தில்தான் கதையில் சிக்கல். இந்த பெண்ணின் கதாபாத்திரத்தை வடிவமைக்கும்போதே மிக மோசமான அறிஞர் அண்ணா வடிவமைத்தது எதற்கென்று விளங்கவில்லை. அவள் வீட்டுக்கு எதிரில் உள்ள ஒரு ஆண் மீது அவளுக்கு காதல் வருகிறது. சோமு என்கிற அந்த கதாபாத்திரம் மிக அழகானவனாக இருந்ததே அதற்கு காரணமாக இருக்கிறது. காதல் என்பதை விடவும் அவன் மீது அளவுக்கடந்த மோகம் கொண்டவளாக அந்த பெண் சித்தரிக்கப்படுகிறாள்.
அப்போதைய சமூக சூழலில் ஒரு பெண் அழகிய ஆண் மீது காமம் கொள்வது பெரும் பிழை என இருந்ததால் அண்ணா அப்படியாக எழுதினார் என்று வைத்து கொண்டாலும் அதை காதலில் ஏன் சேர்க்க வேண்டும். அதே சோமு காந்தா(கதாநாயகி) மிராசுதாரருக்கு வைப்பாட்டி ஆன பிறகு அவளை காண வருகிறான். அவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது.
ஆனாலும் கூட மிராசுதாரருக்கு தெரியாமல் அவனை ஆசை நாயகனாக வைத்துகொள்கிறாள் காந்தா. தனது மனைவியின் நகையை எல்லாம் விற்று சோமு காசு கொண்டு வந்து கொடுக்கும்போது கூட அதை காந்தா தயக்கமின்றி பெற்றுகொள்கிறாள். ஆக அண்ணா காந்தாவை உருவகப்படுத்தும் விதத்திலேயே பிரச்சனை இருக்கிறது.
வழக்கம் போல இறுதியில் இலவு கூட்டி கதை முடிகிறது. இதில் என்ன புரட்சியை அண்ணா புகுத்த நினைத்தார் என்பது மட்டும் விளங்கவே இல்லை. பெண்ணியம் சார்ந்து எழுதுவதில் பிரபஞ்சனுக்கு இருக்கும் தெளிவு அண்ணாவுக்கு இல்லையோ என தோன்ற வைக்கிறது இந்த நாவல்.
மேலும் கதை களங்கள் அப்போது வந்த ஆங்கில க்ரைம் கதைகளின் இன்ஸ்ப்ரேஸனாக பண்ணியிருப்பது தெரிகிறது. இன்சூரன்ஸ் பற்றியே தமிழகத்தில் ஒன்றும் தெரியாத காலத்தில் இன்சூரன்ஸ்க்காக கொலை, பூவில் சைனைடு வைப்பது என பலவும் அங்கிருந்து தூக்கி வந்த கண்டெண்ட் போல தெரிகிறது.

Comments
Post a Comment