பல வருட போராட்டங்களுக்கு பிறகு அறிஞர் அண்ணா தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தப்போது காங்கிரஸ் தோல்வியை கண்டது. அதற்கு முன்பு நடந்த இந்தி திணிப்பு காரணமாக தமிழக மக்கள் காங்கிரஸ் மீது அதிக வெறுப்பில் இருந்தனர். அதனாலேயே முக்கியமாக திமுக வென்றது.
இப்போது விஜய்யை
எப்படி திமுக விமர்சனம் செய்து வருகிறதோ அதே மாதிரியான விமர்சனங்களை அப்போது காங்கிரஸ்
திமுக மீது அள்ளி விட்டுள்ளது. அண்ணா ஆட்சி அமைத்த பிறகு அதற்கு பதிலளித்து எழுதிய
புத்தகம்தான் இந்த புதிய வரலாறு.
ஏதோ இளைஞர்கள்
எல்லாம் கூடி ஆட்சி அமைத்துவிட்டனர். இந்த ஆட்சி நிலைக்காது, எல்லாம் கத்துக்குட்டிகள்
என்பதுதான் அப்போது காங்கிரஸின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால் அப்போதைய திமுகவை எந்த
விதத்திலும் த.வெ.கவுடன் ஒப்பிட முடியாது. திமுக இளைஞர்களில் பலபேர் அப்போது இந்தியை
எதிர்த்த தேசிய மாணவர் படையில் உறுப்பினராக இருந்தவர்கள்.
துரைமுருகன்,
வைகோ போன்ற பலரும் அப்போது மாணவர் படையில் இருந்து போராடியவர்கள். தமிழக அரசியல் தெரிந்தே
அரசியலுக்குள் வந்தனர். அவர்களை அரசியல்ப்படுத்தப்படாத இந்த கூட்டத்தோடு ஒப்பிட முடியாது.
ஆனால் சூழ்நிலை இப்போது போலவே இருந்தது என்பதற்காக மட்டுமே ஒப்பீடு செய்தேன்
அப்போது மத்திய
சர்க்காராக இருந்த காங்கிரஸ் தொடர்ந்து தனக்கு கொடுத்த அழுத்தம் குறித்து அண்ணா இதில்
விளக்கியிருக்கிறார். முக்கியமாக காங்கிரஸ் இருந்த சமயத்தில் பஞ்சம் அதிகமாக இருந்துள்ளது.
அதனால் சில மாவட்டங்களில் ஒரு படி அரிசி ஒரு ரூபாய்க்கு அண்ணா வழங்கியுள்ளார்.
தேர்தல் சமயத்திலேயே
அதற்கு வாய்ப்பே இல்லை என கூறி வந்தது காங்கிரஸ். ஆனால் அண்ணா வந்த பிறகு அதை செயல்படுத்தியுள்ளார்.
இது ஒரு பெரிய விஷயமாக அப்போது பார்க்கப்பட்டுள்ளது. அரிசியின் தேவை அந்த அளவிற்கு
இருந்துள்ளது.
அதே சமயம் இந்த
அரசியல் கூட்டத்தால் மக்கள் வெகுமளவு கஷ்டப்பட்டுள்ளனர். உதாரணத்திற்கு தாம்பரம் பகுதி
அப்போது முக்கிய விவசாய கிராமமாக இருந்துள்ளது. அங்கு அரிசி விளைவிக்க வேண்டும் என
திமுக கூறியுள்ளது. ஆனால் அரிசி விளைவிக்க கூடாது கரும்பு விளைவியுங்கள் என காங்கிரஸ்
அழுத்தம் கொடுத்துள்ளது. (அந்த சமயத்தில் வட இந்தியாவுக்கு தேவையான பெருமளவு சர்க்கரை
தமிழ்நாட்டில் இருந்தே சென்றுள்ளது).
இந்நிலையில்
கரும்பை விளைவித்தால் ஏரியை திறந்து தண்ணீர் தர மாட்டோம் என விவசாயிகளுக்கு அப்போது
அமைச்சராக இருந்த கலைஞர் எச்சரிக்கை கொடுத்துள்ளார். எனவே இந்த இரண்டு கட்சிகளிடமும்
மாட்டி கொண்டு மக்களும் கஷ்டப்பட்டு உள்ளனர்.
இந்த புத்தகம்
முழுக்க அறிஞர் அண்ணா காங்கிரஸை குறை சொல்லியுள்ளார். சில இடங்களில் அது விஜய் திமுகவை
குறை சொல்லும் பாணியிலும் உள்ளதுதான். ஆனால் முழு முற்றாக காங்கிரஸ் அவ்வளவு மோசமாக
இருந்திருக்குமா என தெரியவில்லை. ஆனால் அப்போதைய
அரசியல் களம் குறித்து அறிந்துக்கொள்ள இந்த புத்தகம் உதவியாக இருக்கும்.
Comments
Post a Comment