எங்கள் இதய தெய்வம் பட்டம்மா பட்டம்மா இன்று வீட்டுக்கு வரும்போது கையில் இரண்டு பிஸ்கட் பாக்கெட்களும், ஜவ்வு மிட்டாய் இன்னும் பிற வண்ண மிட்டாய்களும் சில உப்பு, மிளகாய்தூள் தடவிய மாங்காய் துண்டுகளும், சில பலா சுளைகளையும் வைத்திருந்தார் . எனக்கு ஒரே ஆச்சரியம் . “என்ன பட்டமா இன்னக்கி அதிசயமா இவ்ளோ தீனி வாங்கி வச்சுருக்க” “இன்னக்கி என் பேர பிள்ளைகள பாக்க போறேன் அதான் பார்வதி கொஞ்சம் தீனி வாங்கிட்டு போறேன்.” என்றாள் பட்டமா என் பெயர் பார்வதி. பட்டமா என் வீட்டுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்தவர். எங்கள் வீட்டு வேலைகளை செய்துக்கொடுத்து அதற்கு பணம் பெற்றுக்கொள்வார் என்றாலும் அவரை எங்கள் வீட்டில் ஒருவராகத்தான் நான் நினைத்தேன். பட்டாமாவுக்கு ஒரே பிள்ளை பேரு முருகன். இளமை காலங்களில் மனம் போன போக்கில் போனான். ஒரு முறை பட்டமாவோடு வந்த தகராறில் பட்டமாவை அடித்துவிட்டு வெளியேறி வெளிநாடு போனவன் சில வருடம் கழித்து சம்பாதித்த பணத்தை ஏமாந்துவிட்டதாக அழுதுக்கொண்டு வந்து நின்றான். பட்டம்மா மனம் கேட்காமல் மகனுக்கு அடைக்கலம் கொடுத்து வந்தார். சில வருடம் கழித்து மகன் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும்...