எங்கள் இதய தெய்வம் பட்டம்மா
பட்டம்மா இன்று வீட்டுக்கு வரும்போது கையில் இரண்டு பிஸ்கட் பாக்கெட்களும், ஜவ்வு மிட்டாய் இன்னும் பிற வண்ண மிட்டாய்களும் சில உப்பு, மிளகாய்தூள் தடவிய மாங்காய் துண்டுகளும், சில பலா சுளைகளையும் வைத்திருந்தார் . எனக்கு ஒரே ஆச்சரியம் .
“என்ன பட்டமா இன்னக்கி அதிசயமா இவ்ளோ தீனி வாங்கி வச்சுருக்க”
“இன்னக்கி என் பேர பிள்ளைகள பாக்க போறேன் அதான் பார்வதி கொஞ்சம் தீனி வாங்கிட்டு போறேன்.” என்றாள் பட்டமா
என் பெயர் பார்வதி. பட்டமா என் வீட்டுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்தவர். எங்கள் வீட்டு வேலைகளை செய்துக்கொடுத்து அதற்கு பணம் பெற்றுக்கொள்வார் என்றாலும் அவரை எங்கள் வீட்டில் ஒருவராகத்தான் நான் நினைத்தேன்.
பட்டாமாவுக்கு ஒரே பிள்ளை பேரு முருகன். இளமை காலங்களில் மனம் போன போக்கில் போனான். ஒரு முறை பட்டமாவோடு வந்த தகராறில் பட்டமாவை அடித்துவிட்டு வெளியேறி வெளிநாடு போனவன் சில வருடம் கழித்து சம்பாதித்த பணத்தை ஏமாந்துவிட்டதாக அழுதுக்கொண்டு வந்து நின்றான்.
பட்டம்மா மனம் கேட்காமல் மகனுக்கு அடைக்கலம் கொடுத்து வந்தார். சில வருடம் கழித்து மகன் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் தனக்கு உடனே திருமணம் செய்ய வேண்டும் என்றும் விடாப்பிடியாக நின்றான். பணம் காசு தயார் பண்ணி நல்லப்படி திருமணத்தை நடத்தி வைத்து தன் கடன் முடிந்தது என தன் மகனோடும் மருமகளோடும் பேத்தியோடும் வாழ்க்கை வாழ்ந்தாளும் தனியாக சம்பாதித்து தன் வாழ்க்கையை ஓட்டி வந்தார் பட்டம்மா.
ஏனெனில் மகன் திருமணம் ஆனதும் தனி குடித்தனம் சென்று விட்டான். பேத்திக்கு மூன்று வயது இருக்கையில் மகன் வீடு கட்ட வேண்டும் என மீண்டும் ஏழரையை கிளப்ப பட்டம்மா வைத்திருந்த கொஞ்ச சொத்துக்களை விற்று மகனுக்கு இரண்டு வருடத்தில் ஒரு வீடு கட்டி கொடுத்தார்.
இப்போது மகனுக்கும் தாய்க்கும் மீண்டும் சண்டையானது. என் வீட்டு பக்கமே வராதே என மகன் அடித்துவிரட்டி விட்டான். பட்டம்மா மிகவும் வைராக்கியமானவர். மகனை விட்டு வந்து ஒரு வருடமாகிறது. மீண்டும் மகன் வீட்டுக்கு போகவே இல்லை.
பட்டம்மாவை பல விஷயங்களில் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் என்றுமே தன் மகன் சம்பாத்தியத்தை எதிர்ப்பார்த்ததே கிடையாது. ஒண்டிக்கட்டையாக ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்து வருகிறார். அவர் பல வேலைகள் பார்ப்பார்.
காலையிலேயே எங்கள் வீட்டிற்கு வந்து வீட்டு வேலைகளை பார்த்துவிட்டு பிறகு சொந்த வீட்டு வேலைகளை பார்க்க போய்விடுவார். இரவுகளில் எங்கள் ஊர் உணவகத்தில் பரோட்டோ குருமா கட்ட சென்று விடுவார். சில நாட்களில் திருமண சமையல் வேலைகளுக்கும் செல்வார்.
பட்டம்மா பயங்கரமான தேநீர் பிரியர். எப்ப பார்த்தாலும் தேநீர் குடித்துக்கொண்டே இருப்பார். தேநீரில் சிறு குறை இருந்தாலும். “என்னையா டீ போடுற நீ . என்னைய டீ குடுத்தே கொன்னுடலாம் னு இருக்கியா” என திட்டிவிடுவார். இதனாலேயே பக்கத்து கடை டீ மாஸ்டர் பட்டம்மாவுக்கு மட்டும் சிறப்பு தேநீர் வழங்குவார்.
இப்படியாக பட்டம்மா வாழ்க்கை போய்க்கொண்டிருந்தாலும் தன் பேத்தியை பார்க்காமல் பட்டம்மாவால் இருக்க முடியவில்லை. வீட்டுக்கு போய் தன் பேர புள்ளையை பார்க்க முடியாது என்பதால் பட்டம்மா அடிக்கடி தன் பேத்தியை அவள் படிக்கும் பள்ளிக்கு சென்று மதிய இடைவெளி வேளையில் பார்த்துவருவது வழக்கம்.
அதே போல இன்றும் பேத்தியை பார்க்க தான் தயார்படுத்திய திண்பண்டங்களுடன் பட்டம்மா தயாரானார்.
பட்டம்மா சிறிது தீனிகளை தனியாக ஒதுக்கினார்.
“இந்தாம்மா இத என் பேரனுக்கு கொடு” என்றார். அவர் பேரன் என்றது என் மகனைதான். நான் பட்டம்மாள் அன்பை என்றும் நிராகரித்தது இல்லை. அதை வாங்கி கொண்டேன். பட்டம்மா மணியை பார்த்துவிட்டு பள்ளிக்கு அவசர அவசரமாக கிளம்பி சென்றார்.
ஒரு மணி நேரம் கழித்து மிகுந்த மகிழ்ச்சியோடு வந்தார்.
“என் பேத்தி இப்பவே இங்கிலிஷ் எல்லாம் படிக்குது. இந்த காலத்து புள்ளைக என்னா கருத்தா பேசுதுங்க”
பட்டம்மாவின் குழந்தை மனதுக்கு முன்னே எல்லாம் எப்போதும் தூரமாக தான் தெரியும்.
நாட்கள் நன்றாக போய்க்கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் ஒரு இளைஞன் பட்டம்மா வீட்டிற்கு வந்தான். அவன் இரு சக்கர வாகனத்தில் வந்தான். பின்னால் மரத்தாலான ஒரு பெட்டி இருந்தது அதில் நிறைய மிட்டாய் பாக்கெட்டுகள் இருந்தன.
ஏற்கனவே பட்டம்மாள் கூறி இருக்கிறார். தன் மகன் மிட்டாய்களை வாங்கி கடைகளுக்கு விநியோகம் செய்யும் வேலை செய்கிறான் என்று. எனவே அவன் அவர்களது மகனாக தான் இருக்க வேண்டும்.
வேகமாக வந்தவன் வந்தவுடன் பட்டமாவை அடி அடி என்று அடித்து துவைத்தான். பட்டம்மாவின் அந்த கதறல்கள் என்றும் என்னால் மறக்கமுடியாதவை. அருகில் உள்ள நாங்கள் எல்லாம் கதறலை கேட்டு வீட்டுக்குள் சென்று முருகனை வெளியே இழுத்து வந்தோம்.
“இனி என் புள்ளைய பாக்க வந்த உனக்கு அவ்ளோதான்டி கெலவி” என்று ஆவேசமாக கூறிவிட்டு சென்றான்.
பட்டம்மாவை அவ்வளவு எளிதில் யாரும் சிரித்து பார்த்துவிட முடியாது. எப்போதும் புலம்பிக்கொண்டே இருபார். அவர் தன் வாழ்நாளில் அதிசயமாக சிரிப்பதே தன் பேத்தியை பார்க்கும்போது தான் அதையும் தடை செய்துவிட்டு சென்றான் அவர் மகன்.
முடி கலைந்து முகத்தில் கீரலோடு புடவை மடிப்பெல்லாம் கலைந்து போய் எழுந்து நிற்க திராணியற்று குடிசையின் ஓரத்தில் கிடந்தார் பட்டம்மா. நான் எழுப்பி சிறிது தண்ணீர் கொடுத்தேன். பிறகு என்ன நடந்ததென்று கேட்டேன். அழுதுக்கொண்டே பேசினார் பட்டம்மா.
“ என் பேத்திக்கு உடம்பு முடியாம போயிடுச்சாம்மா”
“அச்சச்சோ என்ன ஆச்சு ?”
“ ஏதோ சாப்பாடு ஒத்துகலையாம் புள்ள ஒரே வாந்தியா எடுத்துக்கிட்டு இருக்காலாம் ”
“அதுக்கு ஏன் உங்க பையன் உங்கள அடிக்கிறார் ”
“நான் வாங்கிக்கொடுத்த தீனியால தான் என் பேத்தி உடம்பு சரியில்லாம போச்சுன்னு அந்த டீச்சர் சொல்லியிருக்கா மா அதுனால அந்த பய என்ன அடிக்கிறான் மா, நீயே சொல்லு உடம்பு சரியில்லாம போற மாதிரி நான் என்னம்மா வாங்கி கொடுத்தேன்” பேசிக்கொண்டே அழுக ஆரம்பித்துவிட்டார் பட்டம்மாள்.
விசாரித்ததில் அந்த பள்ளியில் வெளியில் விற்கும் திண்பண்டங்கள் ஈ மொய்த்தவை என அவை சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பட்டம்மா வெளியில் விற்ற திண்பண்டங்களை தன் பேத்திக்கு வாங்கி தந்துள்ளார். ஆனால் அதே தீனியைதான் என் மகனும் சாப்பிட்டான். எனவே தீனியில் எந்த பிரச்சனையும் இருந்ததாக தெரியவில்லை.
இரண்டு நாட்கள் அவர் வெளியே வரவே இல்லை.
இரண்டு நாள் கழித்து பட்டம்மா வேலைக்கு வந்தார். அவர் கண்கள் இன்னும் சிவந்தே காணப்பட்டது. அவர் இரண்டு நாட்களாக அழுதுக்கொண்டே இருந்தார் என தெரிந்தது.
வந்த உடன் துணி துவைக்க குளியலறைக்கு சென்றார். சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் பட்டம்மா அலறும் சத்தம் கேட்டது. நான் பயந்து ஓடி போய் பார்த்தேன். பட்டம்மா குளியலறையில் வழுக்கி விழுந்து மூர்ச்சையாகி கிடந்தார். அவரை தண்ணீர் தெளித்து எழுப்பினேன் அவரால் எழுந்திருக்க முடியவில்லை என்றார். அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவர் மகனுக்கு தகவல் கொடுத்தோம்.
மூன்று மாதமாக எந்த செய்தியும் வரவில்லை. அவரை சொந்த ஊருக்கு அழைத்து சென்றுவிட்டதாக கேள்விபட்டேன். பின்பு சில நாள் கழித்து அவர் மகன் வந்து அந்த குடிசையில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்து கொண்டிருந்தார்.
“ பட்டம்மாவுக்கு என்னாச்சு, இப்ப தேவலாமா?” என்று கேட்டேன்
“அவுங்க இறந்து ஒரு வாரம் ஆகுது” என்றார் அவர் மகன்.
வேதனையடைந்தேன், ஒரு தாயை இழந்த சோகத்தை அனுபவித்தேன் பட்டமாவோடு சில காலம் பழகிய எனக்கு இருந்த துடிப்பு கூட அவரது மகனுக்கு இல்லாததை கண்டேன். அவன் அவசர அவசரமாக பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தான்.
நான் பக்கத்து டீ கடைக்கு சென்று பட்டமாவுக்கு போடுவது போல ஒரு டீ போட்டு தாருங்கள் என்றேன். டீ குடித்துக்கொண்டிருந்த போது பட்டம்மா மகன் முருகன் வாகனத்தில் மிட்டாய் பெட்டியில் ஒரு புகைபடம் இருப்பது தெரிந்தது. அதில் பட்டம்மா படம் போட்டு கீழே எங்கள் இதய தெய்வம் என எழுதப்பட்டிருந்தது.
வாழும்போது இதயத்தில் அடிகளை மட்டுமே வாங்கிய பட்டம்மா இன்று இதய தெய்வமானாள்.
நாட்கள் சென்றன. பட்டம்மாவின் குடிசை இப்போது அந்த இடத்தின் உரிமையாளர் கார் நிறுத்தும் இடமானது. ஆனால் பட்டம்மாள் ஒரு வியப்பளிக்கும் நினைவாகவே என்னுள் இருக்கிறார். அந்த குடிசையை பார்க்கும் போதெல்லாம் பட்டமாவின் நினைவுகள் நிழல் போல் என் முன்னே வந்து போகும்.
RK.ராஜ்குமார்
மன்னார்குடி
மன்னார்குடி
Comments
Post a Comment