ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க - கோபிநாத்
பக்கங்கள் : 112
தலைப்பிலேயே ஒரு புத்தகத்திற்கு வார்னிங் கொடுத்த முதல் மனிதர் கோபிநாத் அவர்கள்தான். சுயமுன்னேற்றம் புத்தகத்தை பொறுத்தவரை அதை எழுதுவதற்கு மிக அதிகப்படியான மன முதிர்வு தேவை. எல்லோராலும் அதை எழுதிவிட முடியாது என நினைக்கிறேன்.
மனித மனம் குறித்த மிக ஆழமான அறிவு கொண்டவர்களால் மட்டுமே அதை சரியாக எழுத முடியும். அந்த வகையில் ஜேம்ஸ் க்ளியர் எழுதிய சின்னஞ்சிறு பழக்கங்கள் ஒரு முக்கியமான புத்தகம்.
ஆனால் கோபிநாத்தின் ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க புத்தகம் அவ்வளவு சரியான புத்தகம் என கூறிவிட முடியாது. பல வருட அனுபவத்திற்கு பிறகு கோபிநாத் இப்படி ஒரு புத்தகத்தை எழுத நினைத்திருக்க வேண்டும். ஒருவேளை இப்போது எழுதினால் கொஞ்சம் அவர் சரியாக எழுதி இருக்கலாம்.
பெரும்பாலும் சுயமுன்னேற்ற புத்தகத்தில் அன்றாட வாழ்க்கை குறித்த விஷயங்கள் பதிவு செய்யப்படும்போது பெரும்பாலான மனிதர்கள் இப்படி இருப்பதை பார்க்கலாம் என்றுதான் பதிவு செய்வார்கள். ஆனால் கோபிநாத் புத்தகம் முழுக்க நீங்கள் இப்படி இருக்கிறீர்கள் அது எவ்வளவு பெரிய பிரச்சனை என பேசுகிறார்.
புத்தகம் முழுக்க ஒருமையில் இப்படி அதிகமாகவே பேசியிருக்கிறார். அதே போல வாழ்வதற்கான நோக்கங்கள் மீதும் அவரது பார்வை சரியானதாக தெரியவில்லை. தலைப்புக்கு தலைப்பு தலைவரின் மனநிலை மாறிவிடுவதை பார்க்க முடிகிறது.
ஏழையாய் இருந்தால் மனம் ஏழையாய் சிந்திக்கும். அப்படி குறைவாக சிந்திக்காதீர்கள். ஏழையாய் இருந்தாலும் உங்கள் சிந்தனை கோடி கணக்கில் இருக்க வேண்டும். இப்போது கோடீஸ்வரர்களாக இருக்கும் பலரும் முன்பு ஏழையாக இருந்தவர்களே என்பது கோபிநாத்தின் வாதமாக உள்ளது.
அமேசான் நிறுவனமும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமும் இவ்வளவு வருவாய் ஈட்டும் நிறுவனமாக வேண்டும் என்கிற எண்ணத்தில் உருவாகவில்லை. அமேசான் நிறுவனம் துவங்கியப்போது வெறும் புத்தகம் மட்டுமே விற்கப்படும் தளமாகதான் உருவானது. அதன் வெப் இண்டர்ஃபேஸ் கூட அப்போது சுமாராகதான் இருக்குமாம்.
அதே மாதிரி நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமும் ஒரு காலத்தில் வாடகைக்கு சிடி விற்கும் நிறுவனமாகதான் இருந்தது. அவர்களது எண்ணங்கள் எப்போது பணக்கார அளவில் யோசிக்க துவங்கியது என்றால் அது நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் உருவானப்போதுதான். எந்த பெரும் நிறுவனமும் 1 லட்சம் முதலீட்டில் துவங்கும்போதே 100 கோடியை இலக்காக கொண்டிருப்பதில்லை. நிறுவனத்தின் வளர்ச்சியே அதை முடிவு செய்கின்றன.
அதற்காக மொத்தமாக புத்தகத்தை புறம் தள்ளியும் விட முடியாது. நிறைய விஷயங்கள் புத்தகத்தில் சிறப்பான விதத்தில் கூறப்பட்டுள்ளன. வாழ்க்கையை எப்போதும் எப்படி சுவாரஸ்யமாக வைத்துக்கொள்வது, மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது என்ன? இப்படி சிலவற்றை கூறலாம்.
ஆனால் ஒருவேளை இப்போது கோபிநாத் எழுதியிருந்தால் இந்த புத்தகம் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும் என்றே தோன்றுகிறது.

Comments
Post a Comment