Skip to main content

அண்ணல் நபி குறித்து அறிஞர் அண்ணா

 

அண்ணல் நபி குறித்து அறிஞர் அண்ணா

தொகுத்தவர்: ஜே.எம் சாலி எம்.ஏ

பொதுவாக இஸ்லாம் குறித்த கண்ணோட்டம் என்பது பொது புத்தியில் மாறியிருக்கிறது. இதற்கு காரணம் என்னவென்றால் திரைப்படங்களில் துவங்கி பொதுவாகவே இஸ்லாமியர் என்றால் மோசமானவர் என்கிற பிம்பமே. அதற்கு தகுந்தாற் போல இஸ்லாத்தை வைத்து கடுமையான சட்டங்களை போடும் பிற்போக்குதனமான சட்டங்கள் இட்டுள்ள நாடுகளையும் நாம் பார்க்கிறோம்.

ஆனால் உண்மையில் அந்த மதம் அவர்களுக்கு எதை போதிக்கிறது எனும்போது இஸ்லாத்து அன்பைதான் போதிக்கிறது. அதை சிலர் சரியாக பின்பற்றுவதில்லை என்பதாக சில இஸ்லாமிய நண்பர்களே கூற கேட்டுள்ளேன்.



நபிகள் இஸ்லாத்தில் என்ன போதிக்கிறார் என்பதை விளக்கும் வகையில் அண்ணா பேசியுள்ள உரைகளின் தொகுப்புதான் இந்த புத்தகம். அறிஞர் அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற கோட்பாடை நபிகளிடம் இருந்துதான் எடுக்கிறார்.

அல்லாஹ் ஒருவனே தேவன் என்கிற நபியின் கோட்பாடு ஒரு புரட்சி என்கிறார் அண்ணா. அதாவது 1400 ஆண்டுகளுக்கு முன்பு அரபு தேசத்தில் அல்லாஹ் முக்கிய தெய்வமாக இருந்தாலும் கூட பல்வேறு உருவங்களை கடவுள்களாக வணங்கியுள்ளனர். கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட தெய்வங்கள்.

இந்த நிலையில் ஏகப்பட்ட குற்றங்களை செய்துக்கொண்டு அவர்கள் மூர்க்கர்களாக இருந்துள்ளனர். அப்போது அவர்களை நல்வழி படுத்த நபிகள் அல்லாஹ் ஒருவனே இறைவன் என்கிற கோட்பாடை கையில் எடுத்துள்ளார். அந்த புரட்சியை சிலாகித்து அறிஞர் அண்ணா பல மேடைகளில் பேசியுள்ளார். அவற்றில் நான் முரண்பட்ட சில பகுதிகளை பகிர்கிறேன்

பெரியாரின் நாஸ்திக கொள்கைகளுக்கு அண்ணா எவ்வளவு முரண்பட்டு இருந்துள்ளார் என்பதை இந்த வரி விளக்குகிறது “எங்களை நாஸ்திகர்கள் எனக் குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால் உருவமற்ற ஒரு தெய்வத்தை நாங்கள் என்றும் மறந்ததில்லை. ஆஸ்திகர்கள் எனத் தம்மைத்தாமே அழைத் துக்கொள்வோர் தங்களுக்குப் பிடிக்காதவர்களுக்குச் சூட்டிய பட்டம்தான் 'நாஸ்திகர்கள்' என்பது. உண்மையிலேயே உலகத்தில் நாஸ்திகர்கள் என ஒரு கூட்டத்தார். இருந்த தில்லை. அப்படி ஒரு வேளை இருந்தாலும்,நிச்சயமாக நாங்கள் அந்தக் கூட்டத்தைச் சார்ந்தவர்களல்ல.

ஆண்டவனை ஐயப்படும் அளவுக்கு ஈனப் பிறவிகளாக அந்த ஆண்டவனால் படைக்கப் பட்டவர்களல்ல நாங்கள் என்பதைத் தெளிவு படுத்துகிறேன்.”

 

“மதத்தின் பயன் எத்தகையதாக இருக்கவேண்டும் என்பது பற்றி நமக்குள் வேறுபாடு இருக்கலாம். ஆகையினா லே, யாராவது சிலர் நாஸ்திகர் என்றும், சிலர் ஆஸ்திகர் என்றும் கருதப்பட்டால் அந்தப் பட்டம் ஆஸ்திகர் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள், தங்களுக்கு அவர்களைப் பிடிக்காத காரணத்தால், அவர்களுக்கு இட்ட பெயர்தானே தவிர வேறொன்றுமில்லை. அதைத் தவிர நாஸ்திகம் என்பது இருந்ததுமில்லை; இனி இருக்க வேண்டிய அவசியமுமில்லை. அப்படி இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள், அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை இப் புனித நாளில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் ஆஸ்திகம் என்பது இயற்கை; இயற்கைக்கு மாறுபட்டு யாரும் இருக்க மாட்டார்கள்.”

 

இந்து மதத்தை விடவும் இஸ்லாம் சிறந்தது போல அண்ணா பேசியிருப்பது சகோதரத்துவத்துக்கு எதிரான வாதமாகவே படுகிறது.. அவை

“இந்த நேரத்தில் இஸ்லாமிய சமூகத்தினருக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்வேன்! அற்புதங்களைக் காட்டி, அதனாலே இஸ்லாம் சிறந்தது என்று நீங்கள் வாதாடினால் உங்களிடமுள்ள அற்புதங்களுக்கு அப்பன்,பாட்டன் என்று சொல்லும்படியான அற்புதங்களெல்லாம், எங்களுடய மதம் என்று வர்ணிக்கப்படும் இந்து மதத்திலே இருக்கின்றன.

உலகத்தில் இஸ்லாம் கடைசிவரை நிலைத்து நிற்கும் என்று ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறியதற்குக் காரணம், அந்த மதத்தில் அற்புதங்கள் குறைவு - அறிவுக் கருத்துக்கள் நிறைவு என்பதால்தான்!

அறிவுக்கொவ்வாத அற்புதக் கதைகள் இந்துக்களிடத் திலே ஏராளமுண்டு .நமது தாய்மார்களைக் கேட்டுப்பாருங் கள் "பிரகலாதன் கதையை விடவா அற்புதக் கதை ஒன்று இருக்கிறது?' என்பார்களே! அற்புதங்களை விற்பனை செய்தவர்களே நாங்கள் - அற்புதங்களின் பிறப்பிடமே நாங்கள் - என்று சொல்லிக் கொள்ளும்படியான எண்ணற்ற கதைகளை இந்துக்கள் எடுத்துச் சொல்வார்கள்!

எனவே, அற்புதங்களைக் காட்டி இஸ்லாமிய கொள்கைக்கு அருமை பெருமை தேடாதீர்கள்! நபிகள் நாயகத்தின் அஞ்சா நெஞ்சுறுதியாலும், அவர் செய்த அறப்போரினாலும்தான் இஸ்லாம் பரவியது.

அடிக்கடி ஆண்டவன் அவதாரம் எடுக்காமலே இஸ்லாத்திலே அரிய கருப்பொருள்கள் ஏராளமாக இருக்கின்றன!”

 

அதேபோல இஸ்லாம் மதத்தின் வன்முறையை நியாயப்படுத்தும் அண்ணாதுரை அது அவர்கள் மதத்தை காப்பதற்காக செய்த ஒன்று என்று கூறுகிறார். “இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற கூற்று அர்த்த மற்றது; இஸ்லாத்தை பரப்ப வாள் பயன்பட்டதில்லை. ஆனால் சிலுவை யுத்தங்களிலே இஸ்லாத்தைக் காக்க அது பயன்பட்டதுண்டு.”

 

அதே சமயம் நபிகள் குறித்து பேசும்போது மட்டும் புகழாரமாக பேசுகிறார். “நம்மில் சிலர் நம் கொள்கைகளைப் பரப்ப அதைரியம் ஏற்படுகிற நேரத்தில் அவர்களுக்கு நபிகள் நாயத்தினுடைய நினைவு வரவேண்டும்.

 

ஆரம்ப காலத்திலே முகம்பது நபியினுடைய கொள்கைகளை அங்குள்ள மக்கள் இலகுவிலே ஏற்றுக் கொண்டார்களா என்றால் இல்லை. அரேபிய பாலை வனத்திலே வசித்த மக்கள் 360 உருவங்களை ஆண்ட வர்களாக வைத்து ஒரு நாளைக்கு ஒன்றாக வணங்கி வந்தனர் என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட மக்களிடம் நபிகள் நாயகம் அவர்கள்,'360 உருவங் களும் ஆண்டவனல்ல' என்று எடுத்துச் சொல்ல எப்படிப்பட்ட ஆற்றல் படைத்தவராக இருந்திருக்க வேண்டும்; எப்படிப்பட்ட ஆபத்துக்களையெல்லாம் அவர் ஏற்றிருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்த்தால் நமக்கும் சீர்திருத்தக் கருத்துக்களை எடுத் துச் சொல்வதிலே ஏற்படக் கூடிய பயம் ஓரளவு நீங்கும்.”

 

இப்படி பேசுவது என்பது முழுக்க முழுக்க இஸ்லாத்துக்கு ஆதரவாகவும் மற்ற மதத்திற்கு எதிராகவும் இருக்கிறது. அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றபோது அந்த ஒரு தேவன் எந்த மதத்தை சேர்ந்த கடவுளாகவும் இருக்கலாம் என்பதாகவே நான் அர்த்தம் கொண்டேன். ஆனால் அது அல்லாஹ்வை மட்டுமே குறிக்கிறது என்பது அண்ணாவின் பேச்சின் மூலம் அறிந்துக்கொள்ள முடிந்தது.

இஸ்லாம் மீது உள்ள ஈர்ப்பால் அல்லாஹ்வை தன் ஒரே கடவுளாக அண்ணா நினைத்துள்ளார். அதில் எந்த தவறும் இல்லை. அவரது தனிப்பட்ட விருப்பம். அவர் கூறுவது போல முகமது நபியும் ஒரு புரட்சிக்காரராக இருந்திருக்கலாம். ஆனால் அதற்காக மற்ற மதங்களை தாழ்த்தி ஒரு மதத்தை உயர்த்துவது என்பது சகோதரத்துவத்துக்கும் மத நல்லிணக்கத்துக்கும் எதிரான செயலாகவே தெரிகிறது.

 

Comments

Popular posts from this blog

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

பேய்ச்சி - ம.நவீன் புத்தக விமர்சனம்

  மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் முதல் நாவல் பேய்ச்சி. இதற்கு முன்பே இவரது சிறுகதை தொகுப்பான வேப்டியான் புத்தகத்தை படித்துள்ளேன். அப்போதே இவரது கதைகள் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அந்த வகையில்தான் பேய்ச்சியை படிக்க ஆசைப்பட்டேன். சமீபத்தில் நண்பர் ஒருவர் புத்தகம் வாங்கி தருகிறேன் என கூறியப்போது பேய்ச்சியை வாங்கி கேட்டேன். நான் ஒரு நாட்டார் வழக்கியல் குலசாமி கதையை எதிர்பார்த்துதான் பேய்ச்சியை வாங்கினேன். ஆனால் புத்தகத்தில் மலேசியாவில் தடை செய்ப்பட்ட புத்தகம் என எழுதியிருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததுக்கு மேல் வேற ஒரு விஷயத்தை பேய்ச்சி செய்தது. இரவில் தூக்கம் வருமா என்பதே சந்தேகம்தான். எந்த ஒரு சாமி கதையிலும் பேய் கதையிலும் காணாத ஒரு உக்கிரமும் கதை போக்கும் கொண்ட கதை பேய்ச்சி. ஆரம்பத்தில் வழக்கமான தமிழ்நாட்டு கிராமத்தில் இருந்தே கதை துவங்குகிறது. கொப்பேரன் எனும் மருத்துவர் சாந்தமான பேச்சி சிலையை வைத்து வணங்கி வருகிறார். ஒரு நாள் ஆட்டுகிடாயை பழி கொடுக்கும்போது கிடாய் தப்பிக்கிறது. அன்று ஒரு அழகிய பெண் வயிற்று வழி காரணமாக கொப்பேரனை பார்க்க வருகிறார். அந்த பெண...