Skip to main content

இந்திய சமுதாயத்தில் ரெத்தினம் ஒரு குற்றவாளி..!


சமுதாயம் என்னும் கட்டமைப்பையும் அதன் விதிமுறைகளையும் மீறியதால் இன்று சமுதாயத்தால் சுத்தமாய் ஒதுக்கப்பட்ட ஒரு மனுசி தான் எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ரெத்தினம் பாட்டி 1930 களில் 8 வயதிலேயே 13 வயது ரெங்கனுக்கு மணமுடிக்கப்பட்டார் ரெத்தினம்.பெண்களின் இந்த மோசமான வாழ்க்கையை இன்னும் மோசமாக்கும் சங்கதி தான் திருமணம் என்பதை அறியாமல் அந்த கூத்து விளையாட்டில் அவரும் அங்கமாகிவிட்டார். பிறகு 15 வயதில் வயிற்றில் பிள்ளை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எழுதபடாத அந்த திருமண அடிமை பெண் சட்டத்தின் கீழ் மாமூலான இந்திய பெண்கள் போல் இவரும் தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். மாட்டு வண்டி ஓட்டுபவர் ரெங்கன். ரெங்கனுக்கு மாடு மனைவி இருவருக்குமே உணர்ச்சி இருப்பதே நினைவில் இருப்பதில்லை. அவரின் முக்கிய சொந்தங்களில் தன் மனைவி ஒன்று என்றாலும் அந்த உறவை கையாள்வதற்கான தகுதி என்பது ரங்கனுக்கு வரவே இல்லை. ஒரு துணைவன் மீது உள்ள எந்த ஈர்ப்பும் ரெங்கன் மீது ரெத்தினத்திற்கு இல்லை. இந்நிலமையில் தான் ஒருநாள் தனது வீட்டிற்கு கூரை வேய வந்த வீரப்பன் மீது ரெத்தினத்திறகு காதல் உண்டானது. மூன்று குழந்தைகளை வைத்து கொண்டு இந்திய சமுதாயத்தில் ஒரு பெண்ணுக்கு வேறோர் ஆணுடன் காதல் ஏற்படுவது எவ்வளவு பெரிய குற்றம் என அந்த இளம் பெண்ணின் மனது அப்போது யோசிக்கவில்லை. இந்திய கலாச்சாரம் என்ற விலங்கு பூட்டப்பட்டிருந்த இந்த அடிமை பெண்கள் கூட்டத்தில் அந்த விலங்கை அவிழ்த்து போட துணிந்துவிட்டார் வேதரத்தினம். வீரப்பனும் ரெத்தினத்தை வெகுவாக காதலித்தார் .வீரப்பனுக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருந்தது. ஆனால் மனைவி இறந்துவிட்டார். இதனால் தனிமையில் இருந்த வீரப்பனுக்கு ரெத்தினத்தின் துணை அவசியமாக இருந்தது. ஆனால் இந்த காதல் வெகு தினங்களுக்கு நிலைக்கவில்லை. அதற்கு நமது மேன்மை பொருந்திய சமுதாயமும் இடம் கொடுக்க போவதில்லை. சங்கதி ஊர் முழுக்க கசிய தொடங்கியது.ரெங்கன் காதுக்கும் செய்தி சென்றது. இது குறித்து ரெங்கனிடம் பேச நினைத்தார் ரெத்தினம் ஆனால் என்ன பேசுவது? என்ன முடிவு எடுப்பது ? இரவோடு இரவாக வீரப்பனோடு  ஓடிவிடலாம். ஆனால் தன் பிள்ளைகள் கதி என்னாவது? இப்படியாக பல வித யோசனைகளில் ரெத்தினத்திற்கு நேரம் ஓடி கொண்டிருந்ததில் இரவு ஆனதே தெரியவில்லை. மாட்டு வண்டி சத்தம் கேட்டது. ரெங்கன் வந்துவிட்டார். நொடிகள் நகர்வதும் ரெங்கன் வருவதும் மிகவும் மெதுவாக நடப்பது போல இருந்தது ரெத்தினத்திற்கு… ரெங்கன் உள்ளே வந்தார். எதுவுமே பேசவில்லை. மாடுகளுக்கு தண்ணீர் வைத்தார். கேள்வி கேட்காமல் ரெங்கன் செல்வது ரெத்தினத்திற்கு மிகவும் நெருடலாக இருந்தது. இரவு சாப்பாட்டுக்கு ரெங்கன் அமர்ந்தார். உலகின் எந்த ஒரு மனிதனை விடவும் அதிகப்படியான தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்த கெள்வியை கேட்டார் ரெத்தினம்.

“ ஏங்க ஊர்ல ஏதாவது சேதி கேள்விப்பட்டியலா ?”

 ரெங்கனின் கண்களில் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தன.

“என்ன வேணும்னாலும் பண்ணிக்க என்ன மட்டும் ஒண்டியா உட்டுட்டு போய்டாத புள்ள”

ரெத்தினம் உறைந்து போனார். இப்படி ஒரு பதிலை அவள் எதிர்ப்பார்க்கவே இல்லை. தன் கணவன் தன்னை எவ்வளவு விரும்பியிருந்தால் இப்படி சொல்லியிருப்பார். நாம் வீரப்பனை மறப்பதே நல்லது என்று முடிவெடுத்தார். அன்று இரவு அமைதியாகவே முடிந்தது
மறுநாள் பஞ்சாயத்து கூடியது. பல வகையாக ரெத்தினத்தை ஏசுவதற்கும் அவச்சொல் பேசுவதற்கும் ஊரும் நாட்டாமையும் தயாராக இருக்க பஞ்சாயத்து ஆரம்பமானது. ரெங்கன் முன்னே வந்து நின்றார்.

“நீ பின்னாடி போப்பா …அந்த தேவிடியாள் சிறுக்கியை முன்னே வர சொல்லு”

அதிர்ந்து போனார் ரெங்கன். அழுதே விட்டார் ரெத்தினம்.

“ என் பொண்ட்டாடிய ஏச எவனுக்கும் இங்க தகுதி கிடையாது. என் வூட்டு பிரச்சனையை நானே பாத்துக்கிறேன்”.

அனைத்து வெற்றிலை வாய்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளியை வைத்துவிட்டு பஞ்சாயத்தை கலைத்தார் ரெங்கன்.
வீரப்பன் , ரெங்கன், ரெத்தினம் ரெத்தினத்தின் குழந்தைகள் எல்லாம் வீட்டில் இருந்தனர். ரெங்கன் தீர்க்கமாக பேசினார்.

“ரத்தினம் எனக்கு உன் சந்தோஷம் தாம் புள்ள முக்கியம்.. வீரப்பனும் அவன் பொண்ணும் நம்ம கூடவே இருக்கட்டும். எனக்கு அதை பத்தி கவலை இல்லை. இந்த ஊர் உலகம் பேசுறத பத்தி எல்லாம் கூட எனக்கு கவலை இல்லை. நாம கூட்டா வாழ்வோம். சரியா” என்றார்.

ரத்தினத்திற்கு அளவு கடந்த மகிழ்ச்சி. உண்மையில் அவர் ரெங்கன் மீது வைத்திருந்தது ஒரு மரியாதை மட்டுமே தன்னுடைய காதல் அவருக்கு வீரப்பன் மேல் தான்… இந்திய கலாச்சார வேலியை உடைத்து ஒரு புது கூட்டு குடும்பம் உருவாவது அவ்வளவு எளிதல்ல. ஐந்து கணவர்களை கொண்ட பாஞ்சாலியை ஏற்றுக்கொண்ட இந்த சமூகம் இரண்டு கணவர்களை கொண்ட ரத்தினத்தை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள போவதில்லை. அதற்காக அந்த குடும்பம் கொடுத்த விலை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

ரத்தினத்தின் உறவினர்கள் அவரை தலை முழுகினர். பஞ்சாயத்து அந்த குடும்பத்தை ஊரை விட்டே ஒதுக்கி வைத்தனர். சில வருடங்கள் கழித்து ரெங்கன் விபத்துக்குள்ளாகி மாட்டு வண்டி ஓட்ட முடியா நிலைக்கு சென்றார். மொத்த குடும்பத்தையும் வீரப்பன் பார்த்துக்கொண்டார்.

ரெத்தினத்தின் பிள்ளைகளும் வீரப்பனின் மகளும் வளர்ந்தனர். பெற்றோர் மூவரும் சேர்ந்து அனைவருக்கும் தன் சக்திக்கு ஆன மட்டும் திருமணம் செய்து வைத்தனர். வளர்ந்து திருமணம் ஆன பிள்ளைகள் அவர்கள் வழியை பார்த்து சென்றன. 

இந்த மூவரும் தனித்து விடப்பட்டனர் என்றாலும் அவர்கள் மூவரும் ஒன்றாக இருப்பதே அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தன் பிள்ளைகளால் உதறிவிடப்பட்டோம் என்றோ நாம் அனாதை என்றோ அந்த கிழ குடும்பத்துக்கு தோன்றவே இல்லை. வீரப்பன் கொத்தனார் வேலைக்கும் ரெத்தினம் வீட்டு வேலைக்கும் செல்வார். கால் முடியாத ரெங்கன் மாலை இருவரும் வரும் வரை வானொலியில் பாடல் கேட்டுக்கொண்டும் சுருட்டை எடுத்து புகை பிடித்துக்கொண்டும் இருப்பார். மாலை வீரப்பன் வேலை முடித்து வந்ததும் ரெங்கனும் வீரப்பனும் சீட்டு விளையாடுவார்கள். நான் சிறு பிள்ளையில் அவர்கள் வீட்டுக்கு செல்லும்போது ரெங்கன் தாத்தா என் வாயிலேயே முத்தம் குடுத்து விடுவார். ரெத்தினம் பாட்டி ரெங்கன் தாத்தாவை திட்டுவார்.

“பச்ச புள்ள வாய்ல சுருட்டு குடிச்சிப்புட்டு முத்தம் குடுப்பாவளா அறிவு இல்ல”

இப்படியாக போன அந்த வாழ்க்கை நல்லப்படியாக நீடிக்கவில்லை. 70 வயதிற்கு அப்புறம் மீண்டும் பஞ்சாயத்து ஏற்பட்டது. இந்த முறை பஞ்சாயத்தை ஆரம்பித்துவிட்டது ரெத்தினம் பாட்டியின் ஆண் பிள்ளைகள். இவ்வளவு நாள் இவர்களின் வாழ்க்கை கேவலமாக தெரியாத இந்த பிள்ளைகளுக்கு திடீரென தாய் இரு கணவர்களுடன் வாழ்கிறாள் என பஞ்சாயத்து வைப்பது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. 

தன் தாய் இப்படி வாழ்வது தனக்கு மரியாதை குறைவாக உள்ளதாகவும் அதனால் பஞ்சாயத்து செய்து தீர்ப்பு வழங்கும்படியும் மகன்கள் கேட்க இந்த முறை வாய்ப்பை நழுவ விடக்கூடாது என அந்த 30 வருடங்களுக்கு முன்பு வெற்றிலை போட்ட வாய்கள் எல்லாம் ஒன்று கூடி அன்று தனது ஆசையை நிறைவு செய்துக்கொண்டன. ரெங்கனும் எந்த பேச்சும் பேசவில்லை. வீரப்பனை பிரித்துவிட்டது பஞ்சாயத்து . வீரப்பன் ஊரை விட்டே அடித்து விரட்டப்பட்டார். சிறிது நாட்களில் ரெத்தினம் பாட்டி படுக்கையாகி இறந்து போனார். அடுத்த வருடமே கவனிக்க ஆள் இல்லாமல் எந்த மகனும் பார்த்துக்கொள்ளாமல் இறந்து போனார் ரெங்கன் தாத்தா. இன்று வரை வீரப்பன் தாத்தா என்ன ஆனார் என்றே தெரியவில்லை.

ஆனால் இந்திய கலாச்சாரத்தை உடைத்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டு கணவருடன் வாழ்ந்த ரெத்தினம் பாட்டியும் அவர் குடும்பமும் எந்த தவறுமே செய்யாத குற்றவாளிகள் என்பதுதான் உண்மை.


Comments

  1. இது கதையா, உண்மையான என்று தெரியவில்லை. ஆனால், மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சிந்தனை தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. உண்மை தழுவிய கற்பனை...

      Delete

Post a Comment

Popular posts from this blog

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

பணம் சார் உளவியல் - Psychology of Money Book Intro

பணம் சார் உளவியல் - Psychology of Money மார்கன் ஹௌஸ்ஸேல் பக்கங்கள்:266 பணம், சேமிப்பு, சுய தொழில் துவங்குவது என பலவற்றை குறித்தும் ஞானத்தை வழங்கும் புத்தகமாக பணம்சார் உளவியல் புத்தகம் இருக்கிறது. மிக முக்கியமாக சேமிப்பு பழக்கம் மற்றும் சேமிப்பை பெருக்குவதற்கு எதிலெல்லாம் நாம் பணத்தை முதலீடு செய்யலாம் என்பதை பற்றி விரிவாக பேசப்பட்டுள்ளது. அதில் ஆகா என வியக்கும் அளவில் சில விஷயங்கள் இருந்தன. அவற்றை மட்டும் இங்கு விளக்கலாம் என நினைக்கிறேன். நாம் எந்த காலத்தில் பிறக்கிறோம் என்பதை பொருத்து நாம் முதலீடு செய்வதும் சேமிப்பதும் மாறுபடும் என்பது ஆசிரியரின் கருத்தாக இருக்கிறது. அது ஒரு வகையில் உண்மையும் கூட. அமெரிக்காவில் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்த காலக்கட்டத்தில் வளர்ந்த ஒருவன், பங்கு சந்தை வீழ்ச்சி முடிந்த பிறகு பிறந்தவனை விட குறைந்த அளவிலேயே பங்குசந்தை முதலீடு குறித்து யோசிப்பானாம்.  ஏனெனில் அவன் வாழ்ந்த காலத்தில் அவன் பங்கு சந்தை முதலீட்டின் ஆபத்து குறித்து அறிந்தவன். ஆனால் பிறகு பிறந்தவன். அந்த ஆபத்தை அனுபவிக்காதவனாக இருக்கிறான். உதாரணத்திற்கு வங்க பஞ்சம் நிகழ்ந்த காலத்தில் பிறந்த ஒரு ந...