Skip to main content

கௌரவன் 2 - நயவஞ்சகமாக வீழ்த்தப்பட்ட துரியோதனின் காவியம் - புத்தக விமர்சனம்



கௌரவன் 2 - நயவஞ்சகமாக வீழ்த்தப்பட்ட துரியோதனின் காவியம்
ஆசிரியர்: ஆனந்த் நீலக்கண்டன்
தமிழில்: நாகலெட்சுமி சண்முகம்
பதிப்பகம்: மஞ்சுள்
பக்கங்கள்: 600

எழுத்தாளர் ஆனந்த் நீலக்கண்டன் தொடர்ந்து புராணங்களில் தோற்கடிக்கப்பட்டவர்களின் பக்கமிருந்து அவர்களது நியாயத்தை பேசும் வகையில் கதைகளை எழுதி வருகிறார். அப்படியாக அவர் ஏற்கனவே எழுதிய அசுரன் என்கிற ராவணனின் கதையை படித்துள்ளேன். அதுவே மிக சிறப்பாக இருந்தது.

அதனை தொடர்ந்து அவர் இரண்டு பாகங்களாக எழுதிய புராணக்கதைதான் இந்த கௌரவன். புராணங்கள் என்பவை உருவாக்கப்பட்ட கதைகள் என்பதால் அவற்றில் பல வெர்ஷன்கள் இருக்கும். ராமாயணத்தை எடுத்துக்கொண்டால் பல வகையான ராமாயணம் உண்டு.

பழங்குடி இன மக்களுக்கு கூட ஒரு தனிப்பட்ட ராமாயணம் கதை உண்டு என கேள்விப்பட்டுள்ளேன். அதே போலதான் மகாபாரதமும். மகாபாரதத்திற்கு பல வகையான கதைகள் இருந்தாலும் கூட பெரும்பான்மையான கதைகளில் கதை நாயகர்களாக பாண்டவர்களே இருந்து வருகின்றனர்.

அதற்கு பதிலாக கௌரவர்களை கதை நாயகர்களாக வைத்து எழுதப்பட்ட கதைதான் கௌரவன். இது ஆனந்த் நீலகண்டனின் வெர்ஷன் என கூறலாம்.

மகாபாராத கதை துரியோதனின் பார்வையில் இருந்து:
மகாபாரத குடும்ப வரலாறு பலருக்கும் தெரியும் என்பதால் எந்த இடத்தில் இந்த கதை மாறுபடுகிறது என்பதை மட்டும் விளக்குகிறேன். எது தர்மம் என்பதை அடிப்படையாக கொண்டுதான் மகாபாரதத்தின் மொத்த கதையும் அமைந்துள்ளது.

துரியோதனன் தனக்கென தனி தர்மத்தை கடைப்பிடிக்கிறான். ஏகலைவன் கட்டை விரலை வாங்கியதில் துவங்கி போரில் நெறி தவறி சண்டையிட்டது வரை அனைத்தும் துரியோதனனுக்கு அதர்மமான விஷயமாக இருக்கிறது. சாதிய அடக்குமுறை, பிராமணர்களின் விதிமுறைகள் என அனைத்தையும் அவன் எதிர்க்கிறான்.

ஆனால் கிருஷ்ணனும், பாண்டவர்களும் அதைதான் தர்மம் என்கின்றனர். இவர்களை பொறுத்தவரை வேதங்கள் சொல்லும் தர்மமே கடைப்பிடிக்க வேண்டியது. அதை காப்பதற்காக எந்த ஒரு தவறை செய்தாலும் அது தவறே கிடையாது.

எனவே தனது சொந்த தர்மத்தை கடைப்பிடிப்பவனுக்கும் (துரியோதனன்), வேதத்தில் சொல்லப்பட்ட தர்மத்தை கடைப்பிடிப்பவனுக்கும் (கிருஷ்ணன்) இடையே மகாபாரத போர் நடக்கிறது. அதோடு மொத்த குரு வம்சமும் அழிகிறது. ஜனமேஜயன் என்கிற ஒருவன் மட்டுமே இறுதி குரு வம்ச வாரிசாக இருக்கிறான். அவனுடைய பிறப்பில் இருந்து கலியின் பிறப்பும் துவங்குகிறது.

விமர்சனம்:


கதையில் ஒவ்வொரு கதாபாத்திரமும் உருவாக்கப்பட்டிருக்கும் விதம் மிக பிடித்திருந்தது. உதாரணத்திற்கு கிருஷ்ணன் மக்கள் மத்தியில் தனது மகா அவதாரத்தை காட்டும்போது எல்லாம் மக்கள் கீழே விழுந்து அவனை வணங்குவார்கள்.

ஆனால் அதையே அவன் துரியோதனனிடம் செய்யும்போது உன் தெருக்கூத்து வித்தைகளை எல்லாம் வெளியே வைத்துக்கொள் என துரியோதனன் சொல்வது மாஸ்.

ஏகலைவனின் கதாபாத்திரம் சிவனின் அவதாரமாக உருவகப்படுத்தப்பட்டிருக்கும். ஏகலைவனுக்கு தான் செய்த துரோகத்திற்கு கைமாறாகதான் துரோணாச்சாரியார் கௌரவர்களுக்கு ஆதாரவாக சண்டையிடுவார். ஏகலைவன் கையில் ஆறிய அந்த வடு துரோணரின் மனதில் கடைசிவரை ஆறவே இல்லை.

அதே போல திரௌபதியின் கதாபாத்திரம் காளிக்கு இணையானதாக இருந்தது. துகிலுரிக்கப்பட்டபின் அவள் எப்போதுமே ஆக்ரோஷமாக இருப்பாள். துச்சாதனன் கொல்லப்படும் போது பீமன் அவனை இரண்டாக பிளப்பான். அவன் இர.த்.தத்தை பீமனும், திரௌபதியும் ருசிப்பர். பிறகு திரௌபதி அந்த ரத்தத்தில் தனது முடியை நனைத்து முடியை எடுத்து கட்டுவதாக காட்சிகள் இருக்கும்.

அதே போல போருக்கான சமயத்தில் உயிர் போகும் அளவில் சண்டையிட்டாலும் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு அவர்கள் சகஜ நிலைக்கு சென்றுவிடுவதாகதான் கதையில் இருக்கும். உதாரணத்திற்கு போர் களத்தில் பீஷ்மரை 50க்கும் அதிகமான அம்புகளை எய்தி தாக்கிய அர்ச்சுனன் அன்று மாலை கௌரவர்கள் கூடாரத்தில் பீஷ்மர் காலடியில் அமர்ந்து கண்ணீர் சிந்துவதாக காட்சிகள் இருக்கிறது.




தொடர்ந்து ஒடுக்கப்பட்ட சனம் படும் துன்பத்தை கதை வெளிப்படையாக விளக்குகிறது. அர்ஜுனனுக்கும் காட்டுவாசி பெண்ணுக்கும் பிறந்த அரவான் என்பவன் ஏகலைவன் மற்றும் அர்ஜுனனை விட சிறப்பான வில் வித்தைக்காரனாக இருப்பான். இலக்கை குறி வைத்து நேராக அம்பு விடாமல் வான் நோக்கி அம்பு விடுவான் அரவான். அவன் வரலாற்றில் பதிவாகிவிட கூடாது என அங்கேயே பழி கொடுத்து அவன் தலையை ஒரு ஈட்டியில் மாட்டி வைத்துவிடுவார்கள் பாண்டவர்கள்.

இப்படியாக கடோத்கஜன், ஏகலைவன் என பல பழங்குடியின கதாபாத்திரங்களின் சாவு என்பது நியாயமற்றதாகவே இருக்கும்.

கடோத்கஜன் தன் அன்னையின் எதிர்ப்பையும் மீறி தந்தை பீமனுக்காக போர் புரிய வருவான். அப்போது கர்ணன் வைத்திருந்த சக்தி வாய்ந்த அஸ்திரம் தாக்கியதில் அவனது கை கால்கள் துண்டாகிவிடும். அவன் உடல் முன் வந்து பார்க்கும் பாண்டவர்கள் “நல்ல வேளை கர்ணன் சக்தி அஸ்திரத்தை பயன்படுத்திவிட்டான். இனி அர்ஜுனனுக்கு ஆபத்தில்லை” என கூறுவர். அப்போதுதான் கடோத்கஜனுக்கு தனது அன்னையின் சொல் நினைவுக்கு வரும். “இந்த போர் நமக்கானது அல்ல”.

ஒரு போர் முடியும்போது வலியையும், இழப்புகளையும்தான் தருமே தவிர அதனால் மகிழ்ச்சி கிடைக்கப்போவதில்லை. யாருமே அதில் ஜெயிக்க முடியாது. இரு தரப்புமே தோல்வியுற்றவர்கள்தான், என்றுமே போரில் வெற்றியாளன் என ஒருவன் கிடையாது என்பதுதான் மகாபாரதத்தின் பெரும் தத்துவமாக தெரிகிறது.

உணர்வு பூர்வமாக கதாபாத்திரங்களை அணுகும் விதம் நமக்கு தூக்கத்தை கெடுத்து விடுகிறது. அங்கு நடக்கும் போரும் உயிரிழப்பும் நம்மை அதிகமாக பாதிக்கும் வகையில் புத்தகத்தின் எழுத்துக்கள் இருக்கின்றன. முக்கியமாக நாகலெட்சுமி சண்முகத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்புக்கு ஹேட்ஸ் ஆஃப்.

இன்னும் எவ்வளவோ இதைப்பற்றி எழுத இருந்தாலும் நீங்களே படித்து தெரிந்துக்கொள்ள வேண்டும் என இத்தோடு முடித்துவிடுகிறேன். ஆனால் மகாபாரத விரும்பிகள் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் கௌரவன்

Comments

Popular posts from this blog

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

பணம் சார் உளவியல் - Psychology of Money Book Intro

பணம் சார் உளவியல் - Psychology of Money மார்கன் ஹௌஸ்ஸேல் பக்கங்கள்:266 பணம், சேமிப்பு, சுய தொழில் துவங்குவது என பலவற்றை குறித்தும் ஞானத்தை வழங்கும் புத்தகமாக பணம்சார் உளவியல் புத்தகம் இருக்கிறது. மிக முக்கியமாக சேமிப்பு பழக்கம் மற்றும் சேமிப்பை பெருக்குவதற்கு எதிலெல்லாம் நாம் பணத்தை முதலீடு செய்யலாம் என்பதை பற்றி விரிவாக பேசப்பட்டுள்ளது. அதில் ஆகா என வியக்கும் அளவில் சில விஷயங்கள் இருந்தன. அவற்றை மட்டும் இங்கு விளக்கலாம் என நினைக்கிறேன். நாம் எந்த காலத்தில் பிறக்கிறோம் என்பதை பொருத்து நாம் முதலீடு செய்வதும் சேமிப்பதும் மாறுபடும் என்பது ஆசிரியரின் கருத்தாக இருக்கிறது. அது ஒரு வகையில் உண்மையும் கூட. அமெரிக்காவில் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்த காலக்கட்டத்தில் வளர்ந்த ஒருவன், பங்கு சந்தை வீழ்ச்சி முடிந்த பிறகு பிறந்தவனை விட குறைந்த அளவிலேயே பங்குசந்தை முதலீடு குறித்து யோசிப்பானாம்.  ஏனெனில் அவன் வாழ்ந்த காலத்தில் அவன் பங்கு சந்தை முதலீட்டின் ஆபத்து குறித்து அறிந்தவன். ஆனால் பிறகு பிறந்தவன். அந்த ஆபத்தை அனுபவிக்காதவனாக இருக்கிறான். உதாரணத்திற்கு வங்க பஞ்சம் நிகழ்ந்த காலத்தில் பிறந்த ஒரு ந...