தாத்தா சொன்ன கதைகள்
கி.ராஜநாராயணன்
பக்கங்கள்: 260
இலக்கிய வட்டாரத்தில் நாவல் கதைகள் படிப்பதெல்லாம் பிரயோஜனமற்ற விஷயம் என நினைக்கும் நபர்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இவர்கள் படிக்கும் வரலாறுகளுக்கு முன்பே கதைகள் உருவாகிவிட்டன. மனித நாகரிகத்தில் எழுதக்கூடிய சான்றோர்கள் பெரிதாக இல்லாத சமயங்களிலேயே வரலாறுகள் கதைகளின் வழியாகதான் பரவி வந்தன. வழிப்போக்கர்கள், வணிகர்கள் சொன்ன கதைகள்தான் மக்கள் தாங்கள் பார்க்காத உலகை கதைகளின் வழியே பார்க்க உதவின என கூறலாம்.
கதைகள் அதிக முக்கியமானவை. இந்தியா மீது அலெக்சாண்டர், முகலாயர்கள், போர்ச்சுக்கீசியர்கள், ஆங்கிலேயர்கள் என பலரும் படையெடுக்க காரணமாக இருந்தவை கதைகளே. இந்தியா குறித்த செவி வழி கதைகளே அதை பற்றிய பிரமாண்டமான தோற்றத்தை உண்டாக்கியது.
இந்த மாதிரியான கதைகளில் ஆசிரியர் என்று யாரும் கிடையாது. கதையை சொல்லக்கூடிய ஒவ்வொரு நபரும் சுவாரஸ்யத்திற்காக எதையாவது கூட்டியோ குறைத்தோ கதையை மாற்றி அமைத்து சொல்ல முடியும். அவை முழுக்க உண்மை என கூற முடியாது. ஆனால் கதைகள் சமக்கால வரலாறுகளை தன்னுள் சுமந்து கொண்டுள்ளது. எனவேதான் நாட்டுப்புற கதைகளுக்கு எப்போதுமே தனி மதிப்பு உண்டு.
1001 அரேபிய கதைகள், பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகள், நீதி நெறி கதைகள் போன்றவை எல்லாமே இந்த மாதிரி நாட்டுபுற கதைகள்தான்.
கி.ராஜநாராயணன் அவருடைய காலத்தில் பேசப்பட்ட நாட்டுபுற கதைகளை தொகுத்திருக்கிறார். பல இடங்களில் பலர் சொல்ல அவர் கேட்ட கதைகள்தான் இவை எல்லாமே. தமிழ்நாட்டில் எத்தனை பேர் இப்படி நாட்டுபுற கதைகளை தொகுத்துள்ளனர் என தெரியவில்லை. எனவே இது ரொம்ப முக்கியமான ஒரு புத்தகம்.
எப்போதுமே அடித்தட்டு மக்களுக்கு தன்னை அதிகாரம் செய்யும் மன்னன், பிராமணன், பண்ணையார் போன்றோர் மீது ஏகப்பட்ட கோபங்கள் இருக்கும். அந்த அடக்குமுறைக்கு எதிராக அவர்களால் எதுவும் செய்ய முடியாமல் இருக்கும். பழந்தமிழ் இலக்கியங்கள் கடவுள், மன்னன், பெருங்குலத்து மக்களின் புகழைதான் எழுதி வந்துள்ளன. எனவே அப்போதிலிருந்தே நாட்டுபுற கதைகளை சாதாரண மக்கள் தங்களுக்கான இலக்கியமாக மாற்றியுள்ளனர்.
அந்தப்படிக்கு இதில் வரும் கதைகளில் மன்னன், பண்ணையாரில் துவங்கி பாரப்பட்சம் இல்லாமல் எல்லோரையும் வைத்து செய்த கதைகள் இருக்கின்றன. ஒவ்வொரு சாதிக்காரரும் இன்னொரு சாதிக்காரரை நாட்டுப்புற கதைகளின் வழியாக விமர்சனம் செய்துள்ளனர்.
பரம கஞ்சனாக இருக்கும் பண்ணையார், ஆட்சி செய்ய தெரியாத மன்னன். ஓவராக சுத்தம் பேசும் பிராமணர். இப்படி நிஜ வாழ்க்கையில் மக்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்திய பழந்தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் எழுத மறந்த கதாபாத்திரங்கள்தான் நாட்டுபுற கதைகளின் கதை மாந்தர்கள். இதில் எத்தனை கதைகள் இப்போதைய தலைமுறையினர் வரை கடந்து வந்துள்ளது என தெரியவில்லை.
இந்த வருடம் படித்த புத்தகங்களில் இது முக்கியமான புத்தகம். இந்த ஆண்டை கி.ராவை கொண்டு முடிப்பதில் மிக்க மகிழ்ச்சி..

Comments
Post a Comment