ஏ.ஐ எனும் ஏழாம் அறிவு
ஹரிஹரசுதன் தங்கவேலு
பக்கங்கள்: 191
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஏ.ஐயின் வளர்ச்சி என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது. மனிதர்கள் சில மணி நேரங்களில் செய்யும் அறிவு சார்ந்த நிறைய வேலைகளை ஏ.ஐ சில நிமிடங்களில் செய்ய துவங்கியது முதலே ஏ.ஐ மீது மனிதர்களுக்கு இருக்கும் ஈடுபாடு என்பது அதிகரிக்க துவங்கியது.
நிறைய டெவலப்பர்களே கூட ஏ.ஐ மனிதர்களின் ப்ரோகிராம் என்பதை மறந்து மனிதனுக்கு போட்டியாகவும் ஏதோ உயிருள்ள ஜீவராசி போலவும் அதை நினைக்க துவங்கியுள்ளனர். எவ்வளவிற்கு ஏ.ஐ யில் நன்மைகள் இருக்கிறதோ அதே அளவில் தீமைகளும் உண்டு. எல்லா விஷயத்திலுமே உலகில் நன்மை என இருந்தால் தீமையும் இருக்கும். தீமையிலும் சில நன்மைகள் இருக்கும்.
அந்த வகையில் ஏ.ஐ வளர்ச்சியில் டீப் ஃபேக் மாதிரியான பல விஷயங்கள் மக்களுக்கு என்னவென்று கூட விளங்குவதில்லை. மேலும் அது பெரும் அச்சுறுத்தலாகவும் இருக்கிறது. இப்படியான நிலையில் ஏ.ஐ குறித்து அவர்களுக்கு குறைந்த பட்ச அறிவையாவது கொடுப்பதன் மூலம் அவர்களை இந்த மாதிரியான மோசமான விளைவுகளில் இருந்து காப்பாற்ற உதவும்.
தமிழில் தொழில்நுட்பம் சார்ந்தே குறைவான அளவில் புத்தகம் வருகிற நிலையில் ஏ.ஐ குறித்து எப்படி இப்படியான புத்தகம் வரும் என நினைத்திருந்த நிலையில்தான் ஏ.ஐ எனும் ஏழாம் அறிவு புத்தகம் வெளியானது. ஆனால் முன்பு சொன்னது போல ஏ.ஐ குறித்த விழிப்புணர்வை அறிவை பொது சனத்துக்கு இது வழங்குகிறதா? என்றால் நிச்சயமாக இது அப்படியான ஒரு புத்தகம் இல்லை.
ஏ.ஐ குறித்த ஒரு வரலாற்று நூலாக மட்டுமே இந்த புத்தகம் வெளி வந்துள்ளது. ஏ.ஐ ஏதோ இப்போது வந்ததாக பலரும் நினைத்து கொண்டிருக்கும்போது அது இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்திலேயே உருவாக்கப்பட்டதில் இருந்து ஏ.ஐயின் வரலாறு துவங்குகிறது.
ஆலன் ட்யூரிங் என்கிற மகத்தான விஞ்ஞானியின் கண்டுப்பிடிப்புதான் ஏ.ஐக்கு அச்சாணி. அதனை தொடர்ந்து ஏ.ஐ என்ன மாதிரியான முன்னேற்றத்தை கண்டது என்ன மாதிரியான கண்டுப்பிடிப்புகள் நிகழ்ந்தன போன்ற அனைத்து தரவுகளையுமே சிறப்பாக வரிசைப்படுத்தி இருக்கின்றனர்.
மேலும் ஏ.ஐ வளர்ச்சியை பொறுத்தவரை அதன் நிலை இப்போது எந்த ஸ்டேஜில் உள்ளது. எதிர்காலத்தில் ஏ.ஐயின் வளர்ச்சி எப்படியிருக்கும் என்பதையும் புத்தகம் எடுத்துரைக்கிறது.
ஒரு வரலாற்று புத்தகமாக இது ஓரளவு சரியான புத்தகம்தான்.
ஆனால் புத்தகத்தின் அட்டையிலேயே இதை குறிப்பிட்டு இருக்கலாம். ஏனெனில் ஹரிஹரசுதன் மாதிரியான துறை சார்ந்த ஆள் எழுதும்போது ஏ.ஐ பயன்பாடு குறித்து தொழில்நுட்ப ரீதியான ஒரு புத்தகமாக இது இருக்கும் என்றே எதிர்பார்த்து வாங்கினேன்.
ஆனால் புத்தகத்தில் முதல் பாதி முழுக்கவே இரண்டாம் உலகப்போர் மற்றும் ஆலன் ட்யூரிங் குறித்தே சென்று கொண்டுள்ளது. அவ்வளவு பக்கங்களுக்கு விளக்கி எழுத வேண்டிய தேவையில்லை. சுருக்கமாகவே அதை எழுதியிருக்கலாம்.
ஏ.ஐ நம்மிடம் என்ன மாதிரியான தகவல்களை திருடுகின்றன. ஏ.ஐ பற்றி தெரியாமல் அதை பயன்படுத்துபவர்கள் எந்த வகையில் ஏ.ஐயிடம் விழிப்புணர்வாக இருக்க வேண்டும். போன்ற விழிப்புணர்வு விஷயங்கள் அவ்வளவாக புத்தகத்தில் இடம் பெறவில்லை.
டீஃப் ஃபேக் என்பது ஏ.ஐ தொழில்நுட்பத்தில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. ஓப்பன் சோர்ஸாக அதற்கான மாடல்கள் கிடைக்கின்றன. அவை குறித்து புத்தகத்தில் பேசப்பட்டிருந்தாலும் கூட இன்னமுமே விரிவாக பேசப்பட்டிருக்கலாம் என தோன்றுகிறது.
இதனால் இந்த புத்தகம் நான் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றுதான் கூற வேண்டும். இதன் மூலம் சொல்ல வருவது என்னவென்றால் இது ஏ.ஐ வரலாறு மற்றும் இரண்டாம் உலகப்போரில் ஆலன் ட்யூரிங்கின் பங்கு ஆகியவற்றை விளக்கும் புத்தகம்தானே தவிர ஏ.ஐ குறித்த தொழில்நுட்பம் சார்ந்த புத்தகம் இல்லை.

Comments
Post a Comment